Wednesday, July 11, 2007

பாலஸ்தீன நாடாளுமன்றத்தை ஹமாஸ் கைப்பற்றியது!

பாலஸ்தீன நாடாளுமன்றத்தை ஹமாஸ் கைப்பற்றியது!
வரலாற்றைப் புரட்டிப் போட்ட தேர்தல் முடிவுகள்!!அபூசாலிஹ்

பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் (ஹர்க்கத்துல் முகவ்வமத்துல் இஸ்லாமியா) என்ற இஸ்லாமிய இயக்கம் பெரும்பான்மை இடங்களைக் கைப் பற்றியது. நெடுங்காலமாகவே ஜியோனிஸ சக்திகளாலும் மேற்கத்திய சார்பு ஊடகங்களாலும், போலி சமாதானவாதி களாலும் 'ஹமாஸ்' ஒரு தீவிரவாத இயக்கமாகவே சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில் பாலஸ்தீன மக்களின் ஏகோபித்த ஆதரவினால் ஹமாஸ் தியாக பூமியின் அதிகார பீடத்தை முதன் முறையாக அடைந்துள்ளது.
மொத்தமுள்ள 132 இடங்களில் 76 இடங்களை ஹமாஸ் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. ஃபதாஹ் கட்சிக்கு 46 இடங்களே கிடைத்தன.
வெற்றிச் செய்திகள் கிடைக்கத் துவங்கியதும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத்தலைவர் ஹாலீத் மஸால் பாலஸ்தீன அரசியல் அதிகாரத்தை, எதிர்க்கட்சியான ஃபதாஹ் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மிக்க பெருந்தன்மையுடன் அழைப்பு விடுத்தார்.
தாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சி யாக பணியாற்ற விரும்புவதாகவும், தங்கள் இயக்கத்தை மீண்டும் கட்டமைப் பதில் கவனம் செலுத்தப் போவதாகவும் ஃபதாஹின் முன்னணித் தலைவர் ஸயீப் எரகாத் பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கவும் பாலஸ்தீன மக்கள் ஆனந்தக் கடலில் மூழ்கத் தொடங்கினர். 'பாலஸ்தீனே உன்னை வாழ்த்துகிறேன்'. 'உனக்கான விடியல் இதோ துவங்கிவிட்டது' என ஆரவார மாய் கோஷமிடுகிறார் உம்முராமி.
வீதிகளெங்கும், பேருந்துகளிலும் ட்ரக்குகளிலும் குழந்தைகள் ஹமாஸ் கொடிகளை அசைத்து கோஷமிட்டுச் சென்றனர். நிலாவுக்குச் சென்ற உணர்வை அடைந்தேன் என நெஞ்சுரு குகிறார் அபூ நஹ்லா என்ற வியாபாரி. ஹமாஸ் வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை என அஹ்மத் கந்தொர் தெரிவிக்கிறார்.
இது பாலஸ்தீன மக்களுக்கான வெற்றி, ஒரு போராடும் இஸ்லாமிய தேசத்தின் வெற்றி என ஸமி தெரிவிக்கிறார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளால் புரையோடிப்போன 'ஃபதாஹ்' பாலஸ்தீனத்தை ஹமாஸ் தூய்மைப்படுத்த வேண்டும் என பெருவாரியான மக்களின் எண்ணமாக உள்ளது.
ஆனால் ஃபதாஹுடன் அதி காரத்தை பகிர்ந்து கொள்வதில் ஹமாஸ் ஆர்வம் காட்டியது. அதிகாரத்தை மீண்டும் தோளில் சுமக்க தங்களுக்கு விருப்பமில்லை என ஃபதாஹ் தெரிவித்துவிட்டது. ஹமாஸின் வெற்றி குறித்து பாலஸ்தீன மக்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடுகிறது. அவ்வாறே பாலஸ்தீனத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் ஹமாஸின் இந்த எழுச்சியை வரவேற்றுள்ளனர்.இரக்கமுற்ற எதிரிகளின் மத்தியில் கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி தங்கள் தாயகத்தை காத்த அந்த இயக்கத்தின் கனவு நனவாகியுள்ளது.
சீறியெழும் ஏவுகணைகளுக்கு மத்தியில், பாய்ந்து வரும் போர் விமானங்களுக்கு நடுவில் தங்கள் உயிரை பணயம் வைத்து தாய் மண் காக்கப் போராடினார்கள். ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். தங்கள் தனிப்பெரும் தலைவர்களை இஸ்ரேலின் சதிச்செயலால் அடுத்தடுத்து (ஷேக் அஹ்மது யாஸீன், ரந்திஸி) இழந்தார்கள்.
ஆம்புலன்ஸ்கள் மீது கூட தாக்குதல் நடத்தி கொலை பாதகங்கள் புரியும் இரக்கமற்ற இஸ்ரேல் அரசு ஒருபுறம், எதிரிகளிடம் பணிவதே பாக்கியம் என்பதை கொள்கையாக வைத்திருக்கும் மஹ்மூத் அப்பாஸ் போன்றவர்கள் மறுபுறம் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் ஜனநாயகப் பாதையை ஒரு போராளி அமைப்பு தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் தனக்கு உண்டு என்பதை ஹமாஸ் நிரூபித்திருக்கிறது.
ஹமாஸ் பாலஸ்தீன நாடாளுமன் றத்தை பிடித்தது என்ற செய்தி வெளி வந்தவுடன் உள்ளூர் ஊடகங்கள் முதல் உலக ஊடகங்கள் வரை செய்தியினை தெரிவித்த விதம் மிகவும் விஷமத்தனமாக இருந்தது.
'தீவிரவாத இயக்கம் தேர்தலில் வெற்றி' என்ற தொனியில் செய்திகளை வெளியிட்டன. பாலஸ்தீன தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டு அது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவையும் பெற்றுவிட்ட நிலையில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் என்று சொல்வதற்கு நீ யார்? என அவர்களின் மனசாட்சி நிச்சயம் அவர்களை கேள்வி கேட்கும்.
இதனிடையே ஹமாஸின் வெற்றி குறித்து ஆக்கிரமிப்பு சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவுக் கூட்டத்தின் மிரட்சி வெளிப்படத் துவங்கியுள்ளது.
ஹமாஸ் அரசியலைத் தேர்ந்தெடுக்கப் போகிறதா இல்லையா என்பதை தெளிவாக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்ட லீஸா ரைஸ் தெரிவித்திருக்கிறார்.
ஹமாஸின் வெற்றி குறித்தும் பாலஸ்தீன எதிர்காலம் குறித்தும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் பிரான்ஸின் பிரதமர் டொமினிக் டி வில்லெபின், ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜேவியர் சொலானா போன்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதில் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி ''இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது துரதிர்ஷ்ட வசமான கெட்ட செய்தி என தெரிவித்திருக்கிறார்.
இனி ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதங்களை கீழே போட்டு அரசியல் நடத்துவார்கள் என தாம் நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த தேர்தல் முடிவினை நிச்சயம் இஸ்ரேல் அங்கீகரிக்கப்போவதில்லை. இந்த முடிவு பாலஸ்தீன மக்களுக்கோ, சமாதான திட்டத்திற்கோ எந்த பயனையும் விளைவிக்கப் போவதில்லை என்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கைப்பாவை அரசின் அதிபர் ஹமித் கர்சாய் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீன நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உலகிற்கு நல்ல செய்தியையே தெரிவித்திருப்பதாக தாம் கருதுவதாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் 'ஹஸன்' விராயுதா தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா மிரட்டல்
ஹமாஸுடன் எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் நமது தோழமை நாடான இஸ்ரேலை அழிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்திய குழுக்களாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு நாம் ஆதரவு வழங்குவது தீவிர ஆலோ சனைக்குப்பின் எடுக்க வேண்டிய ஒன்று என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்திருக்கிறார்.
ஹமாஸ் இயக்கத்தினர் வன்முறை எண்ணத்தை கைவிடா பட்சத்தில் தனது பொருளாதார உதவிகளை நிறுத்தி விடுவோம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈஇந செய்தி தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார். தனது ராணுவ அமைப்பினை ஹமாஸ் கலைக்க வேண்டும். இஸ்ரேலை அழிப்போம் என்று முழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் புஷ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும். தனது ஆயுதங்களை பாலஸ்தீன பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அதே நேரம் இஸ்ரேலும் ஹமாஸை அங்கீகரிக்க வேண்டும் என்று துருக்கிப் பிரதமர் தய்யிப் எர்தோகன் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீன தேர்தல் முடிவை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஹமாஸ் சமாதானத்தை முன்னெடுக்கும் என்பதை முழுமையாக உலகம் நம்ப வேண்டும் என்றும் மலேஷியப் பிரதமர் அப்துல்லாஹ் அஹ்மத் பதாவி தெரிவித்திருக்கிறார். இந்த தேர்தலின் முடிவுகள் பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி யுள்ளது. எனவே அதனை நாம் அலட்சியப்படுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் அமைதியைப் பற்றி பேசுவோம். மேற்குலத்திற்கும் எங்களுக் கும் எந்த சச்சரவும் இல்லை. நாங்கள் பகைமை பாராட்டுவது எங்கள் மண்ணை ஆக்கிரமித்ததைப் பற்றியும், எங்கள் மக்களை தாயகத்தை விட்டு விரட்டிய செயலையும், இன்றும் எம்மக்களை கொன்று குவிக்கும் செயல்களையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோம் என காஸா பகுதிக்கான ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸமிஅபூ ஜுஹ்ரி தெரிவிக்கிறார். இதற்கிடையில் காஸா விலும் பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான ஃபதாஹ் கட்சித் தொண்டர் கள் ''தோல்விக்கு பொறுப்பேற்று அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பதவி விலக வேண்டும்'' என்று போராடி வருகிறார்கள். (அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கடந்த ஆண்டுதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத் தக்கது). ஹமாஸ் இயக்கத்தினருடனும் ஃபதாஹ் இயக்கத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியை நோக்கியும் அவர்கள் வெறித்தனமாக சுட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் ஆயுதம் தாங்கிய தனிப்படையை பிரத்யேகமாக வைத்திருப்பது சமாதானத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆயுதங்களுடன் போராடிய போதே தங்கள் தலைவர்களை எதிரிகளின் வெறித்தனத்திற்கு பலி கொடுத்த அனுபவம் அவர்களுக்கு உண்டு. எனவே அவர்கள் ஆயுதங் களை தவிர்ப்பார்களா என்பது கேள்விக் குறியே என வளைகுடாப்பகுதி அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலஸ்தீன தேர்தல் முடிவுகளை அமெரிக்கா அங்கீகரிக்கப் போவதில்லை. மக்களாட்சியை நோக்கி பாலஸ்தீனமும் ஹமாஸும் நடைபோடுவதாக அமெரிக்கா தடை போடக்கூடும் என அரபு லீக்கின் பொதுச் செயலாளர் அம்ரூ மூஸா அச்சம் தெரிவித்துள்ளதாக பி.பி.ஸி குறிப்பிடுகிறது.
யூதர்களின் வெறித்தனத்திற்கு இடையில் (பார்க்க பெட்டிச் செய்தி) அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் அவநம்பிக்கைக்கு மத்தியில் ஹமாஸ் இன்னொரு சிக்கலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
பாலஸ்தீன அத்தாரிட்டியின் பாதுகாப்பு படையில் தற்சமயம் அப்பாஸின் ஆதரவாளர்களே பெரும் பான்மையாக உள்ளனர்.
இந்நிலையில் மேற்குலகின் அழுத்தத் திற்கு செவிசாய்த்து தனது ஆயுதப்படை பிரிவை கலைத்தால் ஹலாஸ் (அழிய) ஆக வேண்டியதுதான். எனவே, ஹமாஸ் ஆயுதப் படைப்பிரிவை கலைப்பதோ, ஆயுதங்களை கீழே போடுவதோ சாத்தியமற்ற ஒன்று என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வேண்டுமானால் தற்போதைய பாதுகாப்புப் படையை கலைத்துவிட்டு தனது ராணுவப்பிரிவை பாதுகாப்பு படையாக அறிவிக்கக்கூடும் என்றும் யூகங்கள் புறப்பட்டிருக்கின்றன. ஹமாஸ் என்ன செய்யப்போகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நரித்தன நயவஞ்சகத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இஸ்ரேலை தகர்ப்பதுதான் எங்கள் நோக்கமா?ஹமாஸ் தலைவர் மெஷால் பேட்டி
பாலஸ்தீனத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் மெஷால், ''இஸ்ரேலைத் தகர்ப்பது மட்டுமே எங்கள் லட்சியமல்ல, நாங்கள் எங்களது உரிமைகளை மீட்பதற்கு போராடுகிறோம்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதேநேரம், ''ஆக்ரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறாத வரை நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடப் போவதில்லை'' என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹமாஸின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் ஐ.நா.வும் ஹமாஸ் இனி ஆயுதங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட 'ரோட்மேப்' திட்டத்தை ஹமாஸ் மறுதலித்து விட்டது. முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கத்தை ஈரான் வெகுவாகப் பாராட்டியிருப்பதோடு, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கோரியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கான நிதி உதவிகள் அனைத்தையும் உலகவங்கி நிறுத்திவிடும் என்று அதன் சிறப்புத் தூதர் 'ஜேம்ஸ் வொல்ஃபென்சான்' மிரட்டியுள்ளது.படைத்தவனை மட்டுமே அஞ்சும் படைகள், ஐந்தாம் படைகளின் அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சுமா என்ன?
அரண்டு போன இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது!
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் இஸ்ரேல் புதிய சிக்கலை சந்தித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் வெற்றி பற்றிய செய்தி வெளியானதும் இஸ்ரேல் அரசு அவசரக் கூட்டத்தை கூட்டியது. இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமர் யஹுத் உல்மெர்ட் புஷ்ஷின் கருத்தையொட்டி தெரிவித்தார்.
இஸ்ரேலின் எதிர்க்கட்சியான லிக்குட் கட்சியின் தலைவர் பென்ஜமின் நேதன்யாஹு ''இஸ்ரேல் அரசுக்கு இனி நெருக்கடியான கால கட்டம்தான்'' இன்று ஒரு ஹமாஸ்தான் உருவாக்கப்பட்டுவிட்டது. ஈரானின் ஆதரவு நாடாக தலிபான் பாணியிலான அரசு உருவாக்கப்பட்டுவிட்டது என வெறுத்துப்போய் உளறிக் கொட்டினார். இஸ்ரேலின் கடிமா கட்சித்தலைவர் சிமோன் ஃபெரோஸ் கூறுகிறார்: ''பிரச்சினையே பாலஸ்தீன மக்கள் தான் அவர்கள்தான் ஹமாஸை தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் தங்கள் நிலையை மாற்றப்போவதில்லை. நாங்களும் எங்கள் நிலையிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேற்கண்ட யூத பிரமுகர்கள் மட்டுமே சற்று நாகரீக கருத்துக்களை தெரிவித்தவர்கள் இஸ்ரேலின் பழமைவாத பாராளுமன்ற உறு:பபினர் எஃபி எய்த்தாம் என்பவர் ஹமாஸின் எழுச்சி குறித்து கிட்டத்தட்ட பிதற்றியிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஹமாஸ் எம்பிக்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் அதற்காக இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத் துறையான 'ஷின்பாத்தை' பாலஸ்தீன பிராந்தியம் முழுவதும் ஊடுருவச் செய்ய வேண்டும் என்றும் பிதற்றியுள்ளார். இவர்கள் தான் சமாதானப் பிரியர்களாம்! பாலஸ்தீனர்கள், வன்முறை வழி வந்தவர்களாம். இது எப்படியிருக்கு?

No comments: